
வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?
கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை!
---------------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்,
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
அன்புடன் வாத்தியார் அவர்கள் தந்துள்ள விளக்கம் அழகானதே. என்றாலும் சம்பிரதாய பத்தமான நோக்கு பின்வருமாறு :
பகவான் மனுஷயனாக அவதரிக்கும் போது, அவதாரத்தில் மெய்ப்பாடு காரணமாக, தன்மனுஷ்ய பாவனைக்குச் சேர சில குறைகளை தம்மிடத்திலே ஏறிட்டுக் கொள்கிறான்.
ராமாவதரத்தில் சுத்த வீரனான ராமன் கரதூஷண யுத்தத்தில் ஓர் அடி பின் வாங்கினான் என்பதும், வாலியை மரத்தின் பின் நின்று அம்பெய்திக் கொன்றான் என்பதும், பரபுருஷன் கிருகத்தில் சிறை இருந்த காரணத்துக்காக சீதா பிராட்டியை அவள் பதிவ்ருதை என்று தெரிந்தும் தீக்குளிக்கச் செய்தது இத்யாதி தான் மனுஷ்யன் என்பதை பிரம்மாவின் வரத்துகுச் சேர நிரூபிக்கப் பிரயாசைப் பட்டு என்றே சொல்லலாம். அவன் குட்டு வெளிப் பட்ட இடங்களும் பல உண்டு.
அதேபோல் கிருஷ்ணவதாரத்திலும் தன்னை அசக்தன் போலே காட்டிக் கொள்ளவே ஜராசந்தன்-காலயவனன் இவர்கள் போரில் துரத்திய போது புறமுதிகிட்டு ஓடி, பின் துவாரகைக்குக் குடி புகுந்தான். தனக்குப் பிள்ளைப் பேறு இல்லை என்று சிவபெருமானிடத்தில் சென்று யாசித்து வரம் பெற்றதாக பாரத்தத்தில் ஒரு கதையும் உண்டு. மாறாக, அவனுடைய பால சேஷ்டிதங்களைப பார்க்கும் போது அவனுடைய பரத்வத்துக்கு ஒன்றும் குறையில்லை.
கௌரவர்களைப் போலே பாண்டவர்களும் தண்டனைக் குரியவர்களே. அவர்களைக் கொல்லாமல் விட்டது, திரௌபதியின் மங்கள சூத்ரத்துக்கு பங்கம் வரக் கூடாதாகையாலே.இது கண்ணன் நினைவு. குரு-அரசவையில் அவள் பரிபவம் கண்டு ரக்ஷிக்காமல் வாளா இருந்தவர்கள் பாண்டவர்கள். என்றாலும் பரம பாகவதையான திரௌபதியின் மங்கள சூத்ரம் காரணமாக அவர்களையும் கொல்லாமல் அவர்களுக்குத் துணை போனான் கண்ண நெம்பெருமான் என்பதே உண்மை.
சிசுபால-தந்தவக்ரர்களை கண்ண பிரான் தன் கையால் கொன்று அவர்களுக்கு மோக்ஷமளித்தான். கௌரவர்கள் அதற்கும் லாயக் அற்றவர்களாய் அருச்சுனனைக் கருவியாக்கி கொல்வித்தான். அதுவும் அவன் லீலையே ஆகும்.
பரசுராம,பல ராமாவதாரங்களோ வென்னில் அவர்கள் பூர்ணாவதாரங்கள் போலன்றிக்கே அவேசாவதாரம்- அம்சாவதாரங்கள் ஆகையாலே தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றாலும், அவர்கள் விஷயத்தில் நிறையைவிட குறைகளே மிக்கு.
ஆன போதிலும் பகவானுடைய அவதார ரஹஸ்யமறிந்தவர்கள் அவனுடைய செயல்களுக்கு விடைகாண முயல மாட்டார்கள். அது பகவதபசாரத்திலே போய் முடியும் என்று கொண்டு இப்படிப்பட்ட அராய்சியில் துணைபோகமாட்டார்கள். ஹேயகுண பிரதிபடனான பகவானிடத்தில் எந்த குற்றப் பார்வையும் அதனால் ஒவ்வாது.
உத்தவ கீதை நமக்குப் பாடமேயன்றி அவருக்குத் உண்மையில் ஒரு தேடல் இல்லை. மேலும் நிரங்குச ஸ்வதன்ரனான பகவான் ஒரு புன்சரிப்பிலே தன் பதிலை உத்தவருக்குக் காட்டி அவர் வாயை அடைத்தான் என்பது பிரசித்தம்.
'இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே ?'' என்பது திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தை. ''ரிணம் பிருவர்த்த மிவ ....'' என்பது ஸ்ரீ கிருஷ்ண
உபோத்காதம். அப்படிப்பட்ட திரௌபதி விஷயத்தில்
ஆபத்திலே புடவை சுரந்தும்,
சிறு கீரை பிரசாதத்தை உண்டு துர்வாசரை தூர ஓட்டியதும்,
அன்னூற்றுவர் மங்க பார்த்தந்தன் தேர்முன் நின்று பாரதம் கை செய்தது
முதலான இத்தனையும் செய்து அபலையான திரௌபதி அழைத்த போது தூரவாசியாக ஆனேனே எனத் தன்னை குறையாளனாக, கடனைத் தீர்க்காத கடனாளியாக, ''ரிணம் பிருவர்த்த மிவ '' என்றே சொல்லிக்கொண்டு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளினான் வாசுதேவனான கண்ணன் (கண் = ரக்ஷணம். தன்தொழிலை பூர்ணமாமாக செய்பவனே கண்ணன் என்ற பொருளில் ).
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல வந்தது இராமாயணம். அதேபோல தூது போனவன் ஏற்றம் சொல்ல வந்தது மகாபாரதம். இராமாயணத்தில் எப்படி ஹனுமானோ அதேபோல பாரதத்தில் திரௌபதியும் பரம பாகவதை. ஹனூமானுக்கு பல இடங்களில் தனிக் கோயில் இருப்பது போல இவளுக்கும் ''திரௌபதி அம்மன்'' என்ற பெயரில் ஆங்காங்கு கோயில்களைப் பார்க்கலாம். சப்த்த பதிவ்ரதா சிகாமணிகளில் இவளும் ஒருத்தி. பூ மிதித்தல், கரகம் எடுத்தல் போன்ற பிரார்த்தனை தெய்வம் அவள். பெங்களூரில் காடன் பேட்டை திரௌபதி அம்மன் கோயில் கரகம் உலக பிரசித்தி பெற்றதாகும்.
கஜேந்திரன் கூப்பிட்ட குரலுக்குச் சென்று உதவினாப் போலே, தான் அவள் இருக்கும் இடத்துக்குச் சென்று ரக்ஷிக்கவில்லையே என்பது கண்ணனின் வருத்தம். அவன் அப்படி செய்யாததற்கு காரணம் உண்டு என்பர்.
அதாவது, அவன் நேரே சென்றிருந்தால், முதலையைக் கொன்றது போலே துச்சாசனனை கொல்வதோடு முடிந்திருக்காது. துரியோதனன், துணைபோன கர்ணன், அநீதியின் பக்கம் நின்ற பீஷ்ம, துரோணாதிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும். அதற்கு துரியோதனனின் பாபங்களின் முதிர்வுக் காலம் வரை பொறுத்திருக்க வேண்டும் என நினைத்தான் போலும்.
திரௌபதிக்கு அப்படி என்ன பெருமை என்றால் அவள் பிறப்பும், நடத்தையும் காரணமல்ல. மற்று அவள் சரணாகதியின் மஹத்வம் அறிந்தவள். கிருஷ்ணனையே எல்லாமாக விஸ்வசித்தவள். ஆபத்திலே தன்னுடைய மர்ம ஸ்தானங்களை மறைத்துக் கொள்வதை விடுத்து இருகையையும் உயர்த்தி, ''த்வாரகா நிலைய அச்சுத, கோவிந்த, புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம் '' என்று முறையிட்டாள்.
கஜேந்திரனும் '' அகில காரண, அற்புத காரண, நிஷ்காரணாய'' என்று 3 படிகளாலே பகவானுடைய பரதவ பராகாஷ்டமான உபாதான காரணம், சககாரி காரணம், நிமித்த காரணம் என்றிருக்கிற திரிவித்த காரண பூதன் ஈஸ்வரன் என ஓலமிட்டு அழைத்தான்.
அவனைப் போலவே திரௌபதியும் ''அச்சுத [ ஆஸ்ருதர்களை கைநழுவ விடாதவன்], கோவிந்த [ கோ=ஸ்ரீ சூக்திகள். விந்ததி=பேசப்படுதல். ஆரிய-திராவிட வேதங்களிலே நன்கு உத்கோஷிக்கப் பட்டவன்], புண்டரீகாக்ஷ [தாமரைக் கண்ணன்] ஆகிற பரதவ சூசக சப்தங்களையே இட்டு கிருஷ்ணனை அழைத்து தன்னை சமர்ப்பித்தாள்.
அப்படிப்பட்ட திரௌபதி விஷயத்தில் கண்ணன் ''ரிணம் பிருவர்த்தம் இவ'' என்று பேசி தன்னை குறையாளனாக நினைப்பதில் ஆச்சர்யம் உண்டோ ?
இச்சையே அதிகாரம். இரக்கமே உபாயம். இனிமையே உபேயம். (திவ்ய தம்பதிகள்) இருவரின் ஆனந்தமே பல வியாப்த்தி பிரயோஜனம் என்பற்குச் சேர, உய்ய ஒரே வழி அவன் நினைவு. திரௌபதி பக்கல் அவன் நினவு உண்டாகையாலே அவள் உஜ்ஜீவனம் அடைந்தாள். அவள் மங்கள சூத்திரம் காரணமாக பாண்டவர்கள் ஐவரும் நரகாவகர்கள் ஆகாமல், ஸ்வர்கஸ்தர் ஆனார்கள்.
கரும பலம் அனுபவித்தே அற வேண்டும் என்பதாலே , பாண்டவர்கள் அல்லல் பட்டு பின்பு அருளுக்கு இலக்கானார்கள் என்பதும் நியாமான கடவுளின் தீர்ப்பேயாகும்.
கி. ஸ்ரீ. ஸ்ரீ .
No comments:
Post a Comment